நிலையான இன்பம்
அன்றொரு நாள் பள்ளி மாணவர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்டேன். நான் தாமிரபரணி ஆற்றிலே மூழ்கிக் குளிப்பதில் தான் இன்பமும், சுகமும் காண்கின்றேன் என்றான் ஒரு மாணவன். இல்லை . மூழ்குவதால் நாமும் மூழ்கி உள்ளே சிக்கி மடிவோம். மாறாக குற்றால அருவியிலே தலை நீட்டி குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் இன்னொருவன். இதில் எனக்கு இன்பம் இல்லை. ஏனெனில் ஓடி வருகின்ற அருவியில் மின்சாரம் பாய்ந்து வருவதால் அது என் உடலைத் தாக்கும். எனவே என் வீட்டில் உள்ள குழாயில் பூப்போல் விழுகின்ற நீரிலே குளிப்பதில் தான் எனக்கு இன்பமும் சுகமும் உண்டு என்றான் மூன்றாம் மாணவன்.
இந்த வேறுபட்ட பதில்களைத் தருவது என்ன? நிலையற்ற உலகில் மனிதன் அடையும் இன்பமும் நிலையற்றவைதானே! மனிதன் பசியாக இருப்பதை நன்றாக உணருகின்றான். ஆனால் அந்த பசியும் தாகம் உண்டாக்கும் உண்மை நிலை என்ன என்பதை அறிய முடியாதவனாக வாழ்கின்றான். வயிராற உண்டால் பசி மாறிவிடும் என நினைக்கிறான் ஒருவன். போதை வர குடித்தால் போதும் என நினைக்கிறான் ஒருவன். சிற்றின்ப வாழ்விலே மூழ்கிவிட்டால் பேரின்பம் காண்பேன் எனக் கனவு காண்கின்றான் இன்னொருவன். ஏன் ! பணம் திரட்டி பொருள் சேர்ப்பதில் தான் இன்பம் காண்பேன் என நினைக்கிறான் இன்னும் ஒருவன். ஆனால் இவையனைத்தும் இன்று மனிதனுக்கு நிறைவு தருவதில்லையே! யோவான் நற்செய்தி 6:27 – இல் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்காதீர்கள். முடிவில்லா நிலையான வாழ்வு தரும் உணவிற்காக உழையுங்கள். அன்று வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் மன்னாவை உண்டார்கள். ஆனால் மடிந்தார்கள். நான் தரும் உணவை உண்பவனோ என்றுமே வாழ்வான் என்றாரே இயேசு! எதைக் குறிப்பிட்டுச் சொன்னார்?
ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் அரங்கேற்றப்பட்ட இடம் அழகாகக் காட்சித் தரலாம். வெளிச்சம் மிகுதியாக இருக்கலாம். ஆனால் அவையனைத்தும், உதயமாகும் சூரியனுக்கு முன்னே எம்மாத்திரம்! இந்த இடத்தில் இயேசுவின் அமுத வார்த்தைகளை ஆணித்தரமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். நானே வாழ்வு தரும் உணவு, என்னிடம் வருபவனுக்கு என்றுமே பசியிராது (யோவா. 6:35) என்பது இயேசு கூறிய உயிருள்ள வார்த்தைகள் என்பதை இன்று சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
அன்றொரு நாள் ஆற்றங்கரை ஓரத்திலே தனிமையில் வாழ்ந்த முனிவர் விலையேறப்பெற்ற ஒரு வைரக்கல்லைக் கண்டெடுத்தார். இதைப் பார்த்த வழிபோக்கன், ஐயா முனிவரே இக்கல்லை எனக்குத் தாரும் என்று கேட்க முனிவரும் மனம் உவந்து உடன் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இந்த முனிவருக்கு. இதன் மதிப்பு தெரியாது தந்துவிட்டாரே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். சில வாரங்கள் சென்று அந்த முனிவர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான் இந்த வழிப்போக்கன். ஐயா! விலையேறப்பட்ட வைரக் கல்லைக் கொடுத்த நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களே! ஆனால் வைரக் கல்லைப் பெற்ற நான் மகிழ்ச்சி இழந்து நிற்கிறேனே என்றான் கண்ணீர் நிறைந்த கண்களோடு. மகனே! இந்த உயிரற்ற வைரக் கற்களெல்லாம் உன் உள்ளத்திற்கு நிறைவு தராது என்றார் அந்த முனிவர்.
இதுதான் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் மாவீரனாக விளங்கினால் உலகில் புகழோடு வாழ்வேன் என்று கனவு கண்ட இஞ்ஞாசியார், வெறுமையைத்தான் கண்டார். எனவே மனம் திரும்பினார் – திருந்தினார். இயேசுவைத் தன் உள்ளத்தில் அரியணை ஏற்றினார். வாழ்வில் நிறைவும் கண்டார். இவரைப் போல நாமும் வாழ்வு தரும் இயேசுவை அண்டி வருவோமா?